வணக்கம்

வலைத்தளத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இன்றைய நவீன உலகில் பல்வேறு மாசுக்களுக்கு இடையில் செய்தி மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நம்மில் பலர் அறிவார்ந்த சிந்தனைகளை விடுத்து, வரும் தகவலை அப்படியே பகிரும் நிலையில் உள்ளோம். அப்படி செய்பவர்களை பழித்துக் கூற நான் இங்கு வரவில்லை. அடிப்படையிலேய நல்ல உள்ளம் கொண்டு, உடனடியாக தன்னால் ஆன உதவியையோ விழிப்புணர்வையோ செய்திகளைப் பகிர்வதன் மூலம் செய்துவிடத் துடிக்கும் எண்ணத்தின் வெளிப்பாடே இது.

ஆனால் இவ்வாறு பகிரப்படும் தகவல்கள் சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், இதன் விளைவுகள் என்ன, என அறிந்துகொள்ளாமல் தான் பலர் இதை செய்கிறார்கள். அறிவைக் காட்டிலும் உணர்வு மேலோங்கி இருப்பதன் விளைவு இது. எனவே, நான் இதுவரை கண்ட, நீங்களும் அதிகம் பார்த்து பகிர்ந்த, சில போலிகளைக் களைந்து உண்மையை உரைக்க சிறு முயற்சி எடுக்கவுள்ளேன். நம்பகத்தன்மை இல்லாத ஏதாவது போன்மிகளை (மீம்ஸ்) நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதை எனக்கு அனுப்புங்கள். விரைவில் அதைப்பற்றி கட்டுரை வெளியிடுவேன்.

— நன்றி

Advertisements

சீனாவுக்கு சளைத்தவர்களா நாம்?

Screenshot_20181024-191056~01.png

இதுவரை சற்றும் சிந்திக்காமல் பகிரப்பட்டு வந்த போன்மிகளை (Memes) பற்றி பார்த்தோம். ஆனால் இன்று ஒரு ஊடகத்திற்கு இருக்க வேண்டிய பொறுப்பு சிறிதும் இல்லாமல் செய்தி வெளியிட்ட விகடனின் (புகைப்படத்தில் காணப்படும்) செய்தியைப் பற்றி பார்க்கலாம் .அந்த தலைப்பே அது எவ்வளவு தேச விரோத செயல்பாடு என வெளிப்படுத்துகிறது.
செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப பல முறை முயன்று தோற்ற சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியை இந்தியாவுடன் ஒப்புநோக்க வேண்டும் என்றால், அதை முதல் முயற்சியில் குறைந்த செலவில் மங்கல்யான் அனுப்பிய சாதனையுடன் ஒப்பிட வேண்டும். 2022 இல் வரப்போவதாக சொல்லும், இன்னும் காகித அளவில் இருக்கும் ஒரு திட்டத்தை, சிலை வடிப்பதுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்?

தோல்வி அடைந்த நாடுகள்

இந்திய திருநாட்டில் செயற்கரிய சாதனைகள் செய்த தேசத் தலைவர்களுக்கு சிலை வைப்பதை சீனாவுடன் ஒப்புநோக்க விரும்பினால், சிலை வடிப்பது தேவையற்றது என நினைத்தால், சற்று தேடிப்பாருங்கள். உலகின் உயரமான சிலை சீனாவின் Spring Temple Buddha என்று கூகுள் சொல்லும். நம் நாட்டின் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட்டால் அதிலும் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடிக்கும்!

இந்திய திருநாட்டில் செயற்கரிய சாதனைகள் செய்த தேசத் தலைவர்களுக்கு சிலை வைப்பதை சீனாவுடன் ஒப்புநோக்க விரும்பினால், சிலை வடிப்பது தேவையற்றது என நினைத்தால், சற்று தேடிப்பாருங்கள். உலகின் உயரமான சிலை சீனாவின் Spring Temple Buddha என்று கூகுள் சொல்லும். நம் நாட்டின் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட்டால் அதிலும் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடிக்கும்!

சீனா செயற்கை நிலவின் மூலம் மின்சார தேவையை குறைக்கிறது என்று பார்த்தால், அதனுடன் ஒப்புநோக்க வேண்டியது இந்தியா முன்னெடுத்த சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு. சர்தார் சிலை அல்ல.
அந்த செய்திக்குறிப்பில் கம்யூனிச ஆட்சிக்கு ஆதரவாக சில வரிகள் வேறு.
விண்வெளி ஆராய்ச்சியையும் சிலை வைப்பதையும் இணைத்து நம் நாட்டை மட்டம் தட்டிப் பேசும் துணிவு மக்கள் ஏற்றுக்கொள்வதால் வருவது. நான் சொல்வது ஒன்றுதான். போலி செய்திகளை புறக்கணிக்க பழகுங்கள். போலி எது என்று தெரிய முதலில் உங்களுக்கு உண்மை எது என்று தெரிய வேண்டும். இந்த செய்தி போலி இல்லை தான். சீனா முன்னெடுத்திருக்கும் திட்டமும் வரவேற்க தக்கது தான். ஆனால் சிறிதும் ஒத்துப் போகாத இருவேறு புள்ளிகளை இணைத்து நம் நாட்டை விமர்சிப்பது கண்டிக்கத்தக்க செயல்.

விகடனில் வெளியான கட்டுரை

இனி விமானத்திலும் “Whatsapp” பயன்படுத்தலாம்

IMG_20180613_183612942~01

இது தினமலர் நாளிதழில் வந்த செய்தி. நமது பக்கத்தில் போலி செய்திகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதால் இந்த தகவலும் போலியோ? என்ற ஐயம் ஏற்படலாம். இது முற்றிலும் பொய்யான செய்தி அல்ல. ஆனால் இதில் போதுமான விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இது குறித்து விரிவான விளக்கத்தைக் காணலாம்.

விமானங்கள் வான் பயண மின்னணுவியல் கொண்டு இயங்குவது இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல் உண்மை தான். மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதனால் விமானத்திற்கு எவ்வித பாதிப்பும் வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதும் செய்திக்குறிப்பில் உள்ளதுபோல் உண்மையே. அப்படி ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்புக் கருதி மின்னணு சாதனங்களுக்குத் தடை விதித்திருந்தாலும், நவீன விமானங்கள் அதிர்வெண் குறுக்கீடுகளைத் தவிர்க்க போதுமான பாதுகாப்பு அமைப்புகளுடன் தான் தயாரிக்கப் படுகின்றன. எனவே விமானத்தின் பாதுகாப்பிற்கு எவ்வித சிக்கலும் இல்லை. அதனால் தான் அதனால் தான் 3000 மீட்டர்களுக்கு மேல் அலைபேசி பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது (பெரும்பாலான நாடுகளில்). பின்னர் ஏன் 3000 மீட்டர்கள் வரை பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வி எழலாம்.

இங்கு உண்மையில் மின்னணு சாதனங்களால் விமானத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும், இதனால் நிலத்தில் இருக்கும் அலைபேசி இணைப்புகளுக்கு பாதிப்பு உண்டு. தரையில் நகரும் வரை, நம் அலைபேசி மிக அருகில் இருக்கும் அலைபேசி கோபுரத்துடன் இணைப்பில் இருக்கும். மகிழுந்தில் விரைவாக செல்லும்போது கூட அதிகபட்சம் இரண்டு அலைபேசி கோபுரங்கள் போட்டி போட்டு, இறுதியில் ஒன்றில் இருந்து தான் நமக்கு சேவை கிடைக்கும். ஆனால் விமானத்தில் அதிவேகமாக பயணிக்கும்போது ஒரே அலைபேசி குறைந்தபட்சம் மூன்று கோபுரங்களிடமிருந்து சேவை பெற முயற்சிக்கும். ஆனால் ஒரு கோபுரம் தான் சேவை வழங்க போட்டியிட, இதனால் சேவை மைய கணினிகள் முடங்க வாய்ப்புள்ளது. ஒரு விமானத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட அலைபேசிகள் செயல்படுவது இந்த சிக்கலை மேலும் அதிகமாக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சம் இந்திய விமானங்களில் இணையதள வசதியை வழங்குவது தான். மின்னணு சாதனங்களால் விமானத்திற்கு பாதிப்பு வர வாய்ப்பு இருந்தால் இத்தகைய வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படாது. முழு அறிக்கைக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள கோப்பினைப் பார்க்கவும்.

In-Flight Connectivity

ATM எண்ணை முன்பின்னாக மாற்றி அடித்தால் என்ன ஆகும்?

Screenshot_20180616-131036~01
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவு

“டிஜிட்டல் இந்தியா” என நாட்டின் மூளை முடுக்கெல்லாம் இணையதளம் எட்டிப்பிடித்த இந்த காலகட்டத்தில், பணப் பரிவர்த்தன முறைகளும் வெகுவாக மாறிக்கொண்டே வருகின்றன. கத்தை கத்தையாக பணத்தை பையில் எடுத்துச்செல்லும் வழக்கம் போய், எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தன்னியக்கச் சொல்லி யந்திரம் (ATM) மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இப்படி ஒரு புதிய மாற்றத்தை சந்திக்கும் வேளையில் அதன் சவால்களையும் சந்திக்க நேரிடுவது இயற்கையே. முறையாக மக்கள் தன்னியக்கச் சொல்லி யந்திரதைப் பயன்படுத்தத் துவங்கும் முன், முறைகேடாக அதில் இருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் முறைகளை கற்ற கயவர்களும் அதிகம். அதனால், இயல்பாகவே ஒரு பாதுகாப்பு குறித்த கேள்வி எழும். அந்த சிறிய குழப்பத்தினால் பகிரப்பட்ட ஒரு செய்தியே இங்கு காட்டப்பட்டுள்ளது.

இது முற்றிலும் போலியான தகவல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தகவலை சரிபார்க்க நாம் முதலில் தன்னியக்கச் சொல்லி யந்திரம் எப்படி செயல்படுகிறது போன்ற ஆராய்சிகளில் எல்லாம் இறங்க வேண்டியது இல்லை. சில அடிப்படை கேள்விகளை நான் பட்டியலிடுகிறேன். அதற்கான பதிலை யோசித்துப்பாருங்கள், உண்மை வெளிப்படும்.

 1. நான்கு இலக்க சங்கேத எண்ணை முன்பின்னாக மாற்றி அடித்தால் காவல்துறைக்கு தகவல் போகும் என்றால், பின்பி எண்கள் (Number Palindromes) தடை செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?
 2. தவறுதலாக இலக்கங்களை மாற்றி அடித்துவிட்டால் கூட காவல்துறையினர் வர வாய்ப்புள்ளது அல்லவா?
 3. உண்மையில் கொள்ளையர்கள் வந்து நிற்கும்போது நமது சங்கேத எண் நினைவிற்கு வருவதே குதிரைக்கொம்பு. இதில் சரியாக அந்த சமயத்தில் எண்ணை முன்பின்னாக மாற்றி அடிப்பது சாத்தியமா?
 4. ஒருவேளை நாம் சரியாக எண்ணை அடித்து காவலர்களை அழைத்தால் கூட, அவர்கள் வரும் வரை கொள்ளையர்கள் அங்கேயே காத்துக்கொண்டிருப்பார்களா?
 5. இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்கும் ஒரு திட்டத்தை வங்கிகள் செயல்படுத்துமா?
 6. தன்னியக்கச் சொல்லி யந்திரதின் சங்கேத எண்ணை யாருடனும் பகிரவேண்டாம் என்று மாதம் ஒருமுறையாவது விழிப்புணர்வூட்ட வங்கியிடம் இருந்து குறுஞ்செய்தி வருகிறதே, இந்த செய்தியும் உண்மையாக இருந்தால் வங்கி இதை குறுஞ்செய்தி மூலம் பகிர மாட்டார்களா?

இப்படி எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய ஒரு போலி செய்திஇத்தனை காலமாக சமூக ஊடகங்களில் பரவிவருவது அறியாமையின் உச்சமே. எவ்வளவுதான் கல்வித் தகுதி கொண்டிருந்தாலும் இப்படிப்பட்ட செய்திகளைப் பகிர்வதன் மூலம் உங்கள் அறியாமையை உலகிற்கு உணர்த்த முயற்சிக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். இப்படி முன்பின்னாக சங்கேத எண்ணை மாற்றி அடித்தால் சங்கேத எண் தவறு என்ற எச்சரிக்கை தவிர வேறு எதுவும் வராது.

மெரினா போராட்டத்தில் 3 நிமிடத்தில் சிக்னல் ஜாமரை முடக்கிய மாணவர் யார்?

images (21)
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட செய்தி

உலகமே வியந்து பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் சமூக ஊடகங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதே. அந்த சமயத்தில், பல உபயோகமான குறுஞ்செய்திகள் பகிரப்பட்டிருந்தாலும் சில போலி செய்திகள் வளம் வந்து கொண்டுதான் இருந்தன. அப்படி ஒரு செய்தியே மேலே காட்டப்பட்டுள்ள போன்மி (மீம்). தமிழனின் அபார கணினி அறிவு என நினைத்து, சிக்னல் ஜாமர் கருவியை செயலிழக்கச் செய்தார்கள் நம் போராட்டக் குழுவினர் என்னும் செய்தியை உணர்ச்சி மிகுதியால் பலர் பகிர்ந்தனர். உண்மையிலேயே ஒரு சிறந்த கொந்தரால் (Hacker) குறுக்கீட்டழிப்பியை (Jammer) முடக்க முடியுமா என்று பார்க்கலாம்.

இதைப்பற்றி தெரிந்துகொள்ளும் முன், நாம் குறுக்கீட்டழிப்பி எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம். அலைபேசி என்பது கதிர்வழி அலைசெலுத்தி மற்றும் அலைஏற்பி (Radio Transmitter and Receiver) இணைந்த ஒரு கருவி. நீங்கள் பேசும் ஒலியை மின் சமிக்ஞைகளாக (Electric Signals) மாற்றி அருகில் இருக்கும் அலைபேசி கோபுரத்திற்கு அனுப்பும். பின் அங்கிருந்து மறுமுனையில் இருப்பவருக்கு பரிமாறப்பட்டு அவர்கள் அலைபேசியில் மீண்டும் ஒலியாக மாற்றம் பெரும். இவ்வாறு இயங்கும் அலைபேசி எப்படி சரியாக நீங்கள் அழைத்த நபரை தொடர்புகொள்கிறது, FDMA என்றால் என்ன, CDMA என்றால் என்ன, GSM எப்படி இயங்குகிறது போன்ற தகவல்களைக் காண கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்.

How Mobile Phones Work

அலைபேசி அனுப்பும் மின் சமிக்ஞைகள் ரேடியோ அலைவரிசையில் வரும். 2G தொழில்நுட்பத்தில் இயங்கும் அலைபேசிகள் அனைத்தும் பெரும்பாலும் 900 அலைவெண் பேரலகு (Mega Hertz) அலைவரிசை அல்லது 1800 அலைவெண் பேரலகில் செயல்படும். 3G தொழில்நுட்பத்தில் இயங்கும் அலைபேசிகள் 2100 அலைவெண் பேரலகைப் பயன்படுத்தும். அப்படி செயல்படும் அலைபேசிக்கு சமிக்ஞைகள் கிடைக்காமல் செய்ய, குறுக்கீட்டழிப்பியும் அதே அலைவரிசையில் சமிக்ஞைகளை அனுப்பும். இதனால் அதிர்வெண் குறுக்கீடு (Frequency Interference) நிகழ்ந்து அலைபேசிக்கு தகவல் வராமல் முடக்கிவிடும்.

சில குறுக்கீட்டழிப்பிகள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இயங்கும் அலைபேசிகளை மட்டுமே முடக்கும் திறன் வாய்ந்தது. ஆனால் நவீன குறுக்கீட்டழிப்பிகள் அணைத்து விதமான அலைபேசிகளையும் முடக்கும் திறன் வாய்ந்தது. இதில் கவனிக்க வேண்டிய விடயம், குறுக்கீட்டழிப்பிகள் இயங்க எந்த தரவு சேவைகளும் தேவை இல்லை. அவை இணையதளத்துடன் இணைக்கப்படுவதும் இல்லை. அவை செயல்பட தேவையானது மின்சாரம் மட்டுமே.

குறைந்த திறன் கொண்ட குறுக்கீட்டழிப்பிகளின் சக்தி ஒரு சில அடிகளுக்கு மட்டுமே நீடித்திருக்கும். அவை சிறிய மின்கலங்கள் (Battery) கொண்டே இயங்கும். ஆனால் காவல்துறை பயன்படுத்தும் கருவிகளால் ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள பரப்பிற்கு அலைப்பேசி சேவையை முடக்கும் திறன் உள்ளது. இவற்றை செயலிழக்கச் செய்ய அதன் மின்னிணைப்பைத் துண்டிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே எவ்வளவு திறமையான கொந்தராக இருந்தாலும் குறுக்கீட்டழிப்பியை செயலிழக்கச் செய்ய முடியாது.

தமிழனின் பெருமைகளை வெளிக்காட்ட பல்வேறு சாதனைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட போலி செய்திகளைப் பகிர்வதனால் நம் அறியாமை வெளிப்படுமே தவிர, இதில் பெருமை இல்லை.

அதிக தகவல்களுக்கு கீழுள்ள தரவுகளைக் காணவும்:

 1. Mobile Phone working Basics
 2. How Signal Jammer Works

“Amazon lucky wheel”ஐ மீண்டும் சுழற்றும் முன் கவனிக்க…

msg4
புலனத்தில் பகிரப்படும் போலி குறுஞ்செய்திகளில் சில

அமேசான் போன்ற பேரு நிறுவனங்கள் விழா காலங்களில் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். அந்த சேவையையும் மக்களின் பேராசையையும் பயன்படுத்தி சம்பாதிக்க இணையதளத்தில் பலர் செயல்பட்டு வருகிறார்கள். மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்ற குறுஞ்செய்திகள் உங்களுக்கும் வந்திருக்கக்கூடும். சிலர் அதை பகிரவும், மேலும் சிலர் அந்த இணைப்புகளில் ஏதாவது இலவசம் கிடைக்குமா என்று பரிசோதித்தும் பார்த்திருப்போம். சிலர் ஒரு படி மேலே போய் ஒரு இணைப்பில் எதுவும் கிடைக்காவிட்டால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மன்னன் விக்ரமாதித்தன் போல் மீண்டும் வேறொரு இணைப்பு வந்தால் அதில் முயற்சி செய்வர். இது போன்ற குறுஞ்செய்திகளால் என்ன நடக்கிறது என்பதைக் காணலாம்.

இது போன்ற இணைப்புக்களை Chrome, Firefox போன்ற உலாவிகள் (Browsers) தடை செய்துவிடும். மேலும் அவை மென்பொருள் தரவிறக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது, உங்கள் சொந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது போன்ற எச்சரிக்கை செய்தியும் வெளியிடும்.

முயற்சித்துப் பார்க்க: amazons.gift/iphone

Capture.JPG2

அலைபேசியில் பொதுவாக இப்படி வருவது இல்லை. மேலும் எல்லா இணைப்புக்களும் முடக்கப்பட்டிருக்கும் என்பதும் நிச்சயம் இல்லை. இந்த இணைப்புகளை பயன்படுத்துவதனால் நமக்கு ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை. மேலும், அமேசான் போன்ற நிறுவனங்கள் தான் வழங்கும் தள்ளுபடிகளை அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடாமல் ஏதோ ஒரு புதிய தளம் எதற்காக ஆரம்பிக்க வேண்டும்? இலவசங்களின் மீது அவ்வளவு நாட்டம் இருந்தால், இந்த இணைப்புக்களை உடனடியாக சொடுக்காமல் சற்று அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

சரி, இந்த இணைப்புகளை நாம் சொடுக்குவதன் மூலம் அதை உருவாக்கியவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? ஏன் இதை அவர்கள் உருவாக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். இணையதளத்தில் பணம் சம்பாதிக்க விளம்பரங்கள்தான்  சிறந்த வழி. ஒரு YouTube காணொளி பலரால் பார்க்கப்பட்டிருந்தால் மட்டும் அதை வெளியிட்டவர் பணம் பார்க்க முடியாது. அந்த காணொளியைக் காணும்போது தவறுதலாகவோ இல்லை தேவை கருதியோ விளம்பரங்களை பயனாளர்கள் அழுத்தினால் தான் அந்த காணொளியை வெளியிட்டவருக்கு பணம் கிடைக்கும்.  எனவே, Playstore இல் வரும் இலவச விளையாட்டுகள், YouTube காணொளிகள் ஆகியவற்றில் வரும் லாபம் மிகக் குறைவு. பல பயனாளர்கள் AdBlock போன்ற செயலிகள் பயன்படுத்தியோ, விளையாட்டு செயலிகளை அகல்நிலையில் (Offline) பயன்படுத்தியோ விளம்பரங்களைத் தவிர்த்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை விளம்பரங்களைப் பார்க்க வைக்க இலவசம் என ஆசையைத் தூண்டி போலி இணைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இது விளம்பரங்களைப் பார்க்க வைப்பதுடன் நின்றுவிடும் வரை மகிழ்ச்சி. ஆனால் இத்தகைய போலி இணையதளங்கள் மூலம் உங்கள் சொந்த விவரங்கள் திருடப்படுகின்றன. ஒவ்வொருவரின் சொந்தத் தகவல் பெரு நிறுவனங்களுக்கு எவ்வளவு அவசியம் என தெரிந்துகொள்ள தற்போது முகநூல் நிறுவனம் மீது தொடுக்கப்பட்டு நடைபெற்று வரும் வழக்கில் இருந்து தெரிந்துகொள்ளலாம். அதைப்பற்றிய விரிவான விளக்கத்தை இறுதியாக இணைத்துள்ளேன்.

டிஜிட்டல் யுகத்தில் தகவல் திருட்டை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று “இரும்புத்திரை” திரைபடத்தில் சற்று விழிப்புணர்வு அளித்திருக்கிறார்கள். அரசாங்கம் இலவசங்களை அள்ளித்தருவதை பலவாறு வெளியில் விமர்சிக்கும் நாம், மனதில் இருக்கும் ஆசையால் இணையத்தில் இலவசங்களை வரவேற்று திருட்டுக்கு துனைபுரிகிறோம். இது மேலும் தொடராமல் இருக்க, போலி தகவல்களைப் பகிர்வதை நிறுத்துங்கள்.

நம் தகவல்களை முகநூல் பெற்றது எப்படி:

Facebook Knows Literally Everything About You

விரிவான விளக்கங்களுக்கு:

Amazon wheel hoax explained

மின்னல் வெட்டும்போது அலைபேசி பயன்படுத்து சரியா?

msg3
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட செய்தி

உற்றார் உறவினரின் உயிர் காக்க, அலைபேசி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பார்த்த உடனே பகிரப்படும் செய்திகளில் இதுவும் ஒன்று. இந்த செய்தியைப் பார்த்தவுடன் இது நம்பகத்தன்மையற்றது என்பதை புரிந்துகொள்ளலாம். காரணங்களைப் பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.

இடி மின்னல் தாக்கம் அதிகம் இருக்கும் மழை காலங்களில், நாம் வெளியில் இருந்தால் மின்னலிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வல்லுனர்கள் சொல்லும் மிகப் பாதுகாப்பான வழி பேருந்து, மகிழுந்து போன்ற வாகனங்களுக்குள் இருப்பது தான். இது போன்ற வாகனங்கள் ஒருவேளை மின்னல் தாக்குமானால், அதன் உலோக அமைப்பு ஃபாரடே கூண்டாக (Faraday’s shield) செயல்பட்டு வெளியில் இருந்து வரும் நிலை மின்னேற்றத்திலிருந்து காப்பாற்றும். நிலத்திற்கு சற்றும் அருகில் இல்லாத விமானம் கூட இதனால் தான் பாதுகாப்பாக செல்கிறது. விரிவான விளக்கத்திற்கு கீழுள்ள காணொளியைப் பார்க்க.

When Lightning Strikes Your Airplane (YouTube)

சரி, அப்படியானால் வீட்டில் இருக்கும்போது மின்னல் வெட்டும் வேளையில் அலைபேசி பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழும். மின்னூட்டம் பெற்ற மேகங்களின் நிலைமின்னேற்றம் (Static Charges) காற்றின்  வழியே பாய்ந்து, தரையை அடைந்து மின்னூட்டத்தை இழப்பதே மின்னல் (Electrostatic Discharge). இது பூமியை அடைய உலோகங்கள் வழியே பாயக்கூடும் என்றாலும், அலைபேசி போன்ற சிறு பொருட்கள் அதனை ஈர்க்காது. உயர்ந்த கட்டிடங்கள், கோபுரங்கள் போன்றவையே மின்னலின் இலக்காகும். மனிதர்கள் மின்னலால் தாக்கப்படுவது வெட்ட வெளிகளில் மட்டுமே.

ஆனால் இதுவரை நான் குறிப்பிட்டது அலைபேசியை மட்டுமே. தொலைபேசியை அல்ல. இடி மின்னல் அதிகம் இருக்கும் நேரங்களில் தொலைபேசி (Land line phone) பயன்படுத்துவது ஆபத்தானது. உயர்ந்த கட்டிடங்களை தாக்கும் மின்னல், அதன் மின்னூட்டத்தை இழக்க விரைந்து நிலத்தை அடைய முயற்சிக்கும். அதற்கு அக்கட்டிடத்தின் மின்சார கம்பிகளை எளிதான வழித்தடமாக அமையும் (Low Resistance Path). அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி, கடுமையான மின் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட விளக்கங்கள் மூலம் அலைபேசி பயன்பாட்டால் அந்த விபத்து நிகழவில்லை என்பதை அறிகிறோம். சமூக வலைதளங்களில் வந்த செய்தி போலி என்றால், உண்மை செய்தி என்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான செய்திக் குறிப்பை இத்துடன் இணைத்துள்ளேன். (வாகனம் ஓட்டும்போது அலைபேசி பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை!)

உண்மை சம்பவம் (செய்திக் குறிப்பு)

மேலும் பல தகவல்களைப்பெற கீழுள்ள தரவுகளைக் காணவும்:

Lightning Myths Bursted (Youtube)

Dangerous Using Phone in Thunderstrom

What is a Faraday Cage

காவிரி தராத மாநிலத்திற்கு மின்சாரம் தருவது சரியா?

meme2
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவு

இந்த மீமை பார்த்தவுடன் நியாயமாக நமக்கு சேரவேண்டிய காவிரி நீரைத் தராதவர்களுக்கு நாம் ஏன் மின்சாரம் கொடுக்க வேண்டும்? நாம் நமக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்துகொண்டு அண்டை மாநிலங்கள் தண்ணீர் தரும் வரை அவர்களுக்கு மின்சாரம் தராமல் தடை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றும். இந்தத் திட்டத்தை பரிசீலிக்கும் முன், மின்சாரம் எப்படி விநியோகிக்கப் படுகிறது, நம் தமிழகத்தில் இருக்கும் மின் நிலையங்கள் யாருக்கு சொந்தமானது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் செயல்படும் மின் நிலையங்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமானது அல்ல. கல்பாக்கம், கூடங்குளம், நெய்வேலி என முக்கிய மின் நிலையங்கள் CGS (Central Generating Stations) எனப்படும் (மத்திய அரசுடன் இணைந்து உருவாக்கியது. அதில் மாநிலங்களுக்கு பங்கு மட்டுமே கிடைக்கும்). அவற்றின் கட்டுப்பாடு மத்திய மின்துறையிடம் உள்ளது.

ஒரு மாவட்டத்திற்கு செல்லும் மின்சாரத்தை மற்றொரு மாவட்டம் தடுத்து நிறுத்த முடியாது. இது ஏன் என புரிந்துகொள்ள National Grid எனப்படும் தேசிய மின் கட்டமைப்பு மற்றும் Regional Grid எனப்படும் மண்டல மின் கட்டமைப்பும் எப்படி செயல்படுகிறது என தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஐந்து மின் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் ஒவ்வொன்றாக ஒன்றிணைக்கப்பட்டு, இப்போது ஒரே தேசிய மின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் மாவட்டங்களுக்கு இடையே மின்சாரம் பகிர்ந்தளிப்பது தேசிய சுமை பகுப்பு மையத்தின் அதிகாரத்தின் கீழ் வருகிறது (National Load Despatch Centre). எனவே, நம் மாநிலத்துள் மின் பகிர்மானம் செய்வது மட்டுமே தமிழக மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

மின்சாரத்தைப் பொறுத்தவரை தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு விடயம், ஆற்றின் குறுக்கே அணை கட்டிவிட்டால் நீர் இங்கு வராது என்பது போல், இங்கிருந்து செல்லும் மின்சாரத்தை தடுத்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் செல்லாது என்பது. மின் கட்டமைப்பு என்பது ஒரு வலை பின்னல் போன்றது. நாம் இங்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்சாரம் எங்கு உற்பத்தி ஆனது என்று யாராலும் சொல்ல முடியாது. மேலும், நம் அண்டை மாநிலங்கள் தென் மண்டலம் என்னும் ஒரே மண்டல மின் கட்டமைப்பிற்குள் வருகின்றன. படம்.1 இல் காண்க.

படம் 1
படம்.1 தேசிய மின் கட்டமைப்பு

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், நாம் பல்வேறு இடங்களில் இருந்து வலைதளங்களில் (Internet) தரவுகளை பதிவேற்றம் செய்கிறோம். பின்னர் யார் வேண்டுமானாலும் அதை பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள். அதே போல் தான் மின் கட்டமைப்பும். இங்கிருந்து நேரடியாக செல்லும் வழிகளை துண்டித்தாலும் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் தடையற அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் உற்பத்தியை குறைத்தால், நமக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் குறையும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அதில் நமக்குக் கிடைக்கும் பங்கு, நமது மின் தேவை ஆகிவற்றை படம்.2 இல் காண்க.

peakdet
படம்.2 தமிழ்நாடு மின் தொகுப்பு பங்கீடு

இவ்வளவு சிக்கல் எதற்கு? தமிழகதிற்கு தனியாக மின் கட்டமைப்பு வைத்துக்கொண்டால் என்ன என்ற கேள்வி எழலாம். நிலையான மின்சாரம் கிடைக்க மின் கட்டமைப்பு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. இப்படி புரிந்துகொள்ளலாம். தமிழகத்திற்கு தனி மின் கட்டமைப்பு இருந்தால், திடீர் மின் தடைகள் ஏற்படுவது ஒரு கிண்ணத்தில் இருக்கும் நீரில் கல்லை எறிவது போல் மொத்த நீரையும் பாதிக்கும். இதே தேசிய மின் கட்டமைப்பில் இணைந்திருப்பது ஆற்றில் கல் எறிவது போல். பாதிப்பு அதிகம் இருக்காது. சந்தேகங்களை மறுமொழி அளிக்க.

விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள தரவுகளைப் பார்க்கவும்:

 1. தமிழ்நாடு மின்கட்டமைப்பு விதித்தொகுப்பு
 2. World Energy Council Report on T&D in India
 3. தமிழ்நாடு மின் பங்கீடு (உற்பத்தி மற்றும் தேவைகள் உட்பட)