காவிரி தராத மாநிலத்திற்கு மின்சாரம் தருவது சரியா?

meme2
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவு

இந்த மீமை பார்த்தவுடன் நியாயமாக நமக்கு சேரவேண்டிய காவிரி நீரைத் தராதவர்களுக்கு நாம் ஏன் மின்சாரம் கொடுக்க வேண்டும்? நாம் நமக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்துகொண்டு அண்டை மாநிலங்கள் தண்ணீர் தரும் வரை அவர்களுக்கு மின்சாரம் தராமல் தடை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றும். இந்தத் திட்டத்தை பரிசீலிக்கும் முன், மின்சாரம் எப்படி விநியோகிக்கப் படுகிறது, நம் தமிழகத்தில் இருக்கும் மின் நிலையங்கள் யாருக்கு சொந்தமானது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் செயல்படும் மின் நிலையங்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமானது அல்ல. கல்பாக்கம், கூடங்குளம், நெய்வேலி என முக்கிய மின் நிலையங்கள் CGS (Central Generating Stations) எனப்படும் (மத்திய அரசுடன் இணைந்து உருவாக்கியது. அதில் மாநிலங்களுக்கு பங்கு மட்டுமே கிடைக்கும்). அவற்றின் கட்டுப்பாடு மத்திய மின்துறையிடம் உள்ளது.

ஒரு மாவட்டத்திற்கு செல்லும் மின்சாரத்தை மற்றொரு மாவட்டம் தடுத்து நிறுத்த முடியாது. இது ஏன் என புரிந்துகொள்ள National Grid எனப்படும் தேசிய மின் கட்டமைப்பு மற்றும் Regional Grid எனப்படும் மண்டல மின் கட்டமைப்பும் எப்படி செயல்படுகிறது என தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஐந்து மின் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் ஒவ்வொன்றாக ஒன்றிணைக்கப்பட்டு, இப்போது ஒரே தேசிய மின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் மாவட்டங்களுக்கு இடையே மின்சாரம் பகிர்ந்தளிப்பது தேசிய சுமை பகுப்பு மையத்தின் அதிகாரத்தின் கீழ் வருகிறது (National Load Despatch Centre). எனவே, நம் மாநிலத்துள் மின் பகிர்மானம் செய்வது மட்டுமே தமிழக மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

மின்சாரத்தைப் பொறுத்தவரை தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு விடயம், ஆற்றின் குறுக்கே அணை கட்டிவிட்டால் நீர் இங்கு வராது என்பது போல், இங்கிருந்து செல்லும் மின்சாரத்தை தடுத்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் செல்லாது என்பது. மின் கட்டமைப்பு என்பது ஒரு வலை பின்னல் போன்றது. நாம் இங்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்சாரம் எங்கு உற்பத்தி ஆனது என்று யாராலும் சொல்ல முடியாது. மேலும், நம் அண்டை மாநிலங்கள் தென் மண்டலம் என்னும் ஒரே மண்டல மின் கட்டமைப்பிற்குள் வருகின்றன. படம்.1 இல் காண்க.

படம் 1
படம்.1 தேசிய மின் கட்டமைப்பு

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், நாம் பல்வேறு இடங்களில் இருந்து வலைதளங்களில் (Internet) தரவுகளை பதிவேற்றம் செய்கிறோம். பின்னர் யார் வேண்டுமானாலும் அதை பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள். அதே போல் தான் மின் கட்டமைப்பும். இங்கிருந்து நேரடியாக செல்லும் வழிகளை துண்டித்தாலும் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் தடையற அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் உற்பத்தியை குறைத்தால், நமக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் குறையும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அதில் நமக்குக் கிடைக்கும் பங்கு, நமது மின் தேவை ஆகிவற்றை படம்.2 இல் காண்க.

peakdet
படம்.2 தமிழ்நாடு மின் தொகுப்பு பங்கீடு

இவ்வளவு சிக்கல் எதற்கு? தமிழகதிற்கு தனியாக மின் கட்டமைப்பு வைத்துக்கொண்டால் என்ன என்ற கேள்வி எழலாம். நிலையான மின்சாரம் கிடைக்க மின் கட்டமைப்பு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. இப்படி புரிந்துகொள்ளலாம். தமிழகத்திற்கு தனி மின் கட்டமைப்பு இருந்தால், திடீர் மின் தடைகள் ஏற்படுவது ஒரு கிண்ணத்தில் இருக்கும் நீரில் கல்லை எறிவது போல் மொத்த நீரையும் பாதிக்கும். இதே தேசிய மின் கட்டமைப்பில் இணைந்திருப்பது ஆற்றில் கல் எறிவது போல். பாதிப்பு அதிகம் இருக்காது. சந்தேகங்களை மறுமொழி அளிக்க.

விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள தரவுகளைப் பார்க்கவும்:

  1. தமிழ்நாடு மின்கட்டமைப்பு விதித்தொகுப்பு
  2. World Energy Council Report on T&D in India
  3. தமிழ்நாடு மின் பங்கீடு (உற்பத்தி மற்றும் தேவைகள் உட்பட)

பின்னூட்டமொன்றை இடுக